புதுச்சேரி:
சித்திரை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுடுமண்ணாலான திருவள்ளுவர் சிலையை நிறுவி உள்ளார். இதனை புதுச்சேரியை சேர்ந்த சுடுமண் சிற்பக்கலை நிபுணர் பத்மஸ்ரீ முனுசாமி வடிவமைத்தார்.

கடந்த வாரம் புதுச்சேரி – முருங்கப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தை பார்வையிட சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த சிலையை முனுசாமி வடிவமைத்துள்ளார்.

“நாம் எல்லாம் மகிழ்ச்சியாக தமிழ் புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை தமிழ் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது. இன்று புதிதாக ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஈரடியால் உலகையே அளந்த திருவள்ளுவர் ராஜ் நிவாஸை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்” என அது குறித்த வீடியோவையும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.