மும்பை: மகாராஷ்டிரா முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தொலைக்காட்சி வழியே உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று இரவு 8 மணி முதல் 144 தடை உத்தரவு மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: திரையரங்குகள், அரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்டவை மூடப்படும். திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கான படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது.

வணிக வளாகங்கள் செயல்படாது. அத்யாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற செயல்பாடுகளுக்கு மே 1ம் தேதி காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, 144 தடை உத்தரவானது மாநிலம் முழுவதும் தற்போது அமலுக்கு வந்துள்ளது. முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.