சென்னை: தமிழகத்தில் 1.49 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை நேற்று தொட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: விழிப்புணர்வு வாகனங்கள் 15 மண்டலங்களில் சுற்றி வந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். 45 வயதுக்கு மேற்பட்டோரில் தற்போது வரை 27 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. பொதுமக்கள் கொரோனா பாதிக்காமல் இருக்க முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும்.
சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் 1.49 லட்சம் ரெம்டெசிவர் ஊசி மருந்து கையிருப்பு உள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.