சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சமடைந்துள்ளதால், பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதன் காரணமாக 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள் குறிப்பாக வடமாநிலத்தவா்கள் தங்களுடைய சொந்த ஊா்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனா். அதேபோல வெளியூா் வாசிகள் சென்னை நகருக்கு வரும் பயணங்களை பெருமளவு குறைத்து, பயணத்தை ரத்து செய்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் போ் பயணித்தனா். ஆனால் அதுவும் தற்போது குறைந்து நேற்று சுமார் 6,500 போ் மட்டுமே பயணம் செய்துள்ளனர். பல விமானங்கள் போதிய பயணிகள் இன்றி காலியன பல இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில், போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பை செல்ல வேண்டிய 3 விமானங்கள், ஹைதராபாத் செல்ல வேண்டிய 3 விமானங்கள், பெங்களூரு, மதுரை, பாட்னா செல்ல வேண்டிய தலா 1 விமானங்கள் என 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதைப்போல் சென்னைக்கு திரும்பி வரவேண்டிய இந்த 9 விமானங்களும் என மொத்தம் 18 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.