மும்பை: பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை மையமாக கொண்டுள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம், தனது உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சேவை செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதன்பொருட்டு, அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனை மேம்படுத்த உள்ளதாக பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முக்கிய நகரங்களில் பொருட்களை விரைந்து டெலிவரி செய்யும்வகையில், இரு நிறுவனங்களும் கைகோர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மும்பையில் 5,34,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் கட்டடம் பிளிப்கார்ட்டின் சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. மேலும், இது 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும். இங்கு, சுமார் 1 கோடி வாடிக்கையாளர்களின் பொருள்களை ஒரேநேரத்தில் சேமித்து வைக்க முடியும்.

இதன்மூலமாக 2,500 பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.