சென்னை:
சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாயும், எச்சில் துப்பினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வள்ளலார் நகர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

சென்னையில் ஏப்ரல் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்ற, 1,118 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சனிக்கிழமை மட்டும் 659 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் 2,12,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனிமனித இடைவெளியை பின்பற்றாத 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2,000 ரூபாய் வசூலித்துள்ளனர்.