திருச்சி
இன்று காலை திருச்சியில் சுமார் அரைமணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்வுற்றனர்.
சென்ற மாதம் முதலே தமிழகத்தில் வெய்யில் கடுமையாகி உள்ளது. மாநிலத்தில் திருச்சி நகரில் அதிகபட்ச வெப்ப பதிவு காணப்படுகிறது. இங்குள்ள மக்கள் கடும் வெயிலால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மழை பெய்யலாம் என அறிவித்திருந்தது.
இன்று காலை சுமார் 6.50 மணிக்குத் திருச்சி நகரில் லேசான மழை பெய்யத் தொடங்கியது. அது பலத்த மழையாகி காலை 7.30 மணி வரை பெய்துள்ளது. திருச்சி நகரப்பகுதியில் 4 மிமீ மழையும், விமானநிலையப் பகுதியில் 7.5 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் நகரின் பல பகுதிகளில் தற்போது புதை சாக்கடை பணி முடிவடைந்துள்ளது. ஆனால் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. ஆகவே மழை காரணமாகப் பல இடங்கள் சேரும் சகதியுமாகக் காணப்படுகிறது, இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகினர்.