திருமாவளவனின் சமுதாய மற்றும் அரசியல் தடம்! ஒரு அலசல்
சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்
படித்தவர்கள் திருமாவளவனை ஏற்கவில்லை என்ற கூற்றின் மூலமாக அன்புமணி ராமதாஸ், திருமளவனை மையப்படுத்தி ஒரு மிக பெரிய விவாத பொருளை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்னதாக மனுஸ்ம்ரிதி விமர்சனம் மூலமாக பாஜக ஏற்படுத்திய அதே யுக்தியை கையாண்டார் அன்புமணி. இரண்டிலும் விளைவு ஒன்றாகத்தான் இருந்தது, பெரும்பாலானோர் திருமாவளவனின் நிலையை ஆதரித்தார்கள்.
திருமாவளவனின் ஆரம்பகால தலித் அரசியலில் “மிடுக்கு… சரக்கு…. ” போன்ற பேச்சுக்கள், தலித் அல்லாத மாற்று சமூகத்தாரின் வெறுப்பையும் அருவெறுப்பையும் பெற்றது. அது, திருமாவளவனை, மற்றைய சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தியது. தலித் மற்றும் தலித் அல்லாதோர் இடையே ஒரு முருகு நிலையை உருவாக்கியது. இந்த, சூழ்நிலையை, இடைச்சாதி சங்கங்கள், குறிப்பாக பாமக அரசியல் அறுவடை செய்து, விடுதலை சிறுத்தைகளை ஒரு தீண்டத்தகாத அரசியல் இயக்கமாகவே மாற்றியது.
கால ஓட்டத்தில், திருமா அவர்கள் தமது தவறை உணர்ந்து பக்குவப்பட்டார். தனது இளமைக்காலத்தில் பேசிய துடுக்கான பேச்சுக்களின் விளைவை உணர்ந்தார். அதனால், தமது சமூகம் இழந்ததையும் எண்ணியுள்ளார். அதன் பின்னாக, அவருடைய அரசியல் நடவடிக்கைகளில் நேர்த்தி தெரிந்தது. பெருந்தன்மையும், நிதானமும் அவர் இழந்து, நன்மதிப்பை மீட்டது. அவருடைய பக்குவமான அணுகுமுறை, இக்காலகட்டத்தில் பெரும் கலவரங்களை தவிர்த்துள்ளது.
மனுஸ்ம்ரிதியில் குறிப்பிட்டுள்ளதாக அவர் பெண்மை குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளான போது, அவர் காட்டிய அரசியல் முதிர்ச்சியானது பல மாற்று சமூகத்தினரின் மனங்களையும் வென்றது. தமது நிலைப்பாடு தமது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும் என்றால் கூட்டணியை விட்டு வெளியேறவும் தயார் ஆனால் எக்காலத்திலும் தமது மனுஸ்ம்ரிதி எதிர்ப்பு கொள்கையில் இருந்து பின்வாங்க போவதில்லை என்ற அறிவிப்பு அரசியல் கடந்து, சமுதாயங்கள் கடந்து பலரது மனங்களையும் வென்றது.
பதவிக்காக எதையும் செய்யும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கொள்கைக்காக தேர்தல் அரசியலில் இருந்தும் வெளியேற தயார் என்ற அறிவுப்பு அவருடைய கொள்கை பிடிப்பையும், தியாக உணர்வையும், சமூக நல்லிணக்க எண்ணத்தையும் அனைவர்க்கும் பறைசாற்றியது. படித்தோர், பகுத்தறிவுகொண்டோர் மத்தியில் அவருக்கு ஒரு தனி மரியாதையை உருவாக்கியது. அவருடைய கடந்தகால கசப்புகளை மறக்க தூண்டியது. தாம் ஓர் நேர்த்தியான, பக்குவப்பட்ட அரசியல் தலைமை என்பதை சொல்லாமல் உலகுக்கு சொல்லியது.
இதன்பின்னாக, 2021 சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் தாம் சற்றும் எதிர்பார்க்காத தொகுதி எண்ணிக்கையை திமுக ஒதுக்கியபோது, அனைவரும் திமுக கூட்டணி உடைந்துவிடும் என்றே கணித்தார்கள். ஆனால், மிகுவம் பக்குவப்பட்ட அரசியல் தலைவராக கனிவுடனும் ஞானத்துடனும் பாசிச சக்திகளை எதிர்க்க திமுக கூட்டணி வலுவாக இருப்பது அவசியம். ஆதலால், தமது கட்சியின் அரசியல் வாய்ப்புகள் பறிபோனாலும், கூட்டணி உடையக்கூடாதென்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த தொகுதிகளை பெற்றும் கூட்டணியில் முதலாவதாக சேர்ந்து பாசிச சக்திகளுக்குஎதிரான வலுவான களம் காண உதவினார்.
இதன் மூலமாக அவருடைய தீவிர தலித் அரசியலில் இருந்து மிதவாத சாதுர்ய அரசியலுக்கு மாறினார். மேலும், தமது சமுதாயத்தின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோள் என்றில்லாமல் மற்றைய சமூகத்தினருடனான உறவும் முக்கியம் என்பதை அறிந்து செயல்பட்டார். தமது இயக்கத்தில், ஆளூர் ஷாநவாஸ் போன்ற மாற்று மதத்திற்குமான அரசியல் தலைமையும் உருவாக செய்தார். இட ஒதுக்கீடு பிரச்சனையில் தலித் அல்லாத மற்றைய இடைநிலை சமூகத்திற்காகவும் போராடி அவருடைய அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தி மற்றைய சமுதாயத்தினர் மனங்களையும் வென்றார். இது அரசியல், சாதிய எல்லைகள் கடந்து திருமாவளவனின் ஆளுமையை அனைத்து நல்லோர் உள்ளங்களிலும் இடம் பெற செய்தது.
இந்த சூழ்நிலையில், அரக்கோணம் இரட்டை கொலைவழக்கில் அவர் காட்டிய நிதானம் மிக பெரிய வன்முறையை தவிர்த்தது. அவர் நினைத்திருந்தால், கொலை நடந்த மறுதினமே, மிக பெரிய கலவரத்தை தூண்டி இருக்கலாம். ஆனால், அவருடைய நிதானமும், அரசியல் முதிர்ச்சியும் ஒரு பெரும் கலவரத்தில் இருந்து வட தமிழகத்தை காத்தது மட்டுமில்லாமல் ஒரு சமூக நல்லிணக்கம் நோக்கிய காய் நகர்தலை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். இது அனைத்து தரப்பு உள்ளங்களையும் வென்றுள்ளது.
இக்கால சூழ்நிலையில், அன்புமணி ராமதாஸ் அவர்களின், படித்தவர்கள் திருமாவளவனை ஆதரிக்கவில்லை என்ற கூற்று விமர்சனத்திற்கு உள்ளானது. எம்மை போன்ற படித்த மாற்று சமூகத்தினரையும் வலிய வந்து திருமவளவனை ஆதரிக்கிறோம் என்று பொது வெளியில் பேசவைத்தது. மேலும், சமுதாய நல்லிணக்கத்திற்கும், வளர்ச்சிக்கும், சுய மரியாதைக்கும் ராமதாஸ்களை விட திருமாவளவனின் ஆளுமை சிறந்தது என்பதை மறுப்பாரில்லை. மேலும் திருமாவளவன் அனைத்து தரப்பு படித்த மக்களின் மனங்களை வென்றது என்பதை இணையத்தில் அவருக்கு பெருகும் வாழ்த்துகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.
திருமாவளவனின் அரசியல் மற்றும் சமுதாய வழித்தடம் மிக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து மக்களின் ஆதரவும் அவருக்கு இன்றுபோல் என்றும் நிலைத்து நிற்கும், ஏனெனில் அதற்கான அரசியல் பக்குவமும், முதிர்ச்சியும் அவருக்கு நிறைவாக உள்ளது.