புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழலில் சம்பந்தப்பட்டதாக விசாரிக்கப்பட்டு வரும் பிரபல ஆயுத வியாபாரி சுஷேன் குப்தா, சர்ச்சைக்குரிய ரஃபேல் விமானங்களை வாங்கும் விவகாரத்தில், ஒரு ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏஜெண்ட் வேலைக்காக, ரஃபேல் வர்த்தகத்தில் தொடர்புடைய பிரான்ஸ் நிறுவனங்களான டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் அதன் துணை நிறுவனமான தேல்ஸ் ஆகியவற்றிடமிருந்து, மில்லியன் கணக்கிலான யூரோக்களை, அவர் கமிஷனாகப் பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குப்தா தொடர்பான, அமலாக்கத் துறையின் கோப்புகளிலிருந்து இந்த தகவல் கிடைத்ததாக மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குப்தா என்பவர், இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரகசியமான ஆவணங்களை சட்டவிரோதமாக பெற்றார் எனவும், அவற்றின் மூலம், பிரான்ஸ் நிறுவனங்களிடம் பேரம்பேசி, பெரியளவிலான கமிஷன் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.

மோடி அரசின் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, மீடியாபார்ட் மேற்கொள்ளும் மூன்றாம் கட்ட புலனாய்வில், இந்தப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரகசிய ஆவணங்களை, குப்தா பெற்றது தொடர்பாக, அமலாக்கத்துறை இன்னும் பூர்வாங்க விசாரணையைத் துவக்கவில்லை. ஏனெனில், இந்த ஆவணங்களின் மூலம்தான், பிரான்ஸ் நிறுவனங்கள், ரஃபேல் விமானங்களின் விலையை, முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் அதிகளவில் ஏற்றுவதற்கு துணைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.