புதுடெல்லி: சமீபத்தில், சத்தீஷ்கர் மாநிலத்தில், நக்சலைட் தாக்குதலில் மரணமடைந்த மத்திய ரிசர்வ் படையின் வீரர் ராஜ்குமார் யாதவின் தயாருடைய மருத்துவ செலவை, தான் ஏற்பதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான திருமதி.பிரியங்கா காந்தி.
சத்தீஷ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட நக்சலைட் தாக்குதலில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ராஜ்குமார் யாதவ் என்பவர் பலியானார். அவரின் இறுதிச் சடங்குகள் அயோத்தியில் நடைபெற்றன.
அதேசமயம், ராஜ்குமாரின் தாயார், புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அதற்கான சிகிச்சைகள் அவருக்கு நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக தனது கவனத்தை செலுத்திய காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான திருமதி.பிரியங்கா காந்தி, அந்த வயதான பெண்மணியின் மருத்துவச் செலவை தான் ஏற்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தியின் இந்த மனிதாபிமானம் நிறைந்த நடவடிக்கை, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.