ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் உள்ள ஒரு  பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகள், நள்ளிரவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மொதலில்  4 பாதுகாப்புப் படையினரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. அவர்களை ஒழித்துக்கட்டும் வகையில் பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில்,  சோபியான் மாவட்டத்தில்  உள்ள ஜன்மகுல்லா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினர்  தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பள்ளிவாசலுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் , பாதுகாப்புப் படையினரை கண்டதும் திடீர் தாக்குதல் நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள்  அல்கொய்தா ஆதரவு பெற்ற என்ற அன்சார் கஸ்வாத்-உல்-ஹிந்த் என்ற  தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 4 பாதுகாப்புப் படையினர் காயம் அடைந்தனர்.  அதுபோல, அவந்திப்புரா அருகே டிரால் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில்2  பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.