சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அங்குள்ள சிறு வியாபாரிகள்  கடைகளை அடைக்க மறுத்து  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் கொரோனா கிளஸ்டராக மாறுமோ என்ற அச்சம் மக்கள் மற்றும் சக வியாபாரிகளிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்  4,276 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் தற்போதைய நிலையில், 11,633 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநிலஅரசு மீண்டும் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. அதன்படி, 50 சதவிகித தொழிலாளர்களை கொண்டு இயக்க வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன்,  கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘தமிழகஅரசின் அறிவிப்புக்க எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைக்க மாட்டோம், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி கோயம்பேடு சிறு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் கொரோனா கிளஸ்டராக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில்லரை வியாபாரிகளை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக  கூறப்படுகின்றது.