சென்னை: தமிழகத்தில் இந்த 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வின்போது பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் குறித்து தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3 முதல் 21-ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. மாணாக்கர்களுக்கும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், விரைவில் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. தேர்வுக் கூடங்கள் செய்முறைத் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
2. செய்முறை தேர்வு முடிந்ததும் அனைத்து சாதனங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
3. தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்கு எத்தனை மாணவர்களை பங்கேற்க செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
4. ஒவ்வொரு மாணவருக்கும் 4 சதுர மீட்டர் தொலைவில் தேவையான சாதனங்கள் வைக்கப்பட்ட வேண்டும்.
5. தேவையான அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.
6. கிருமிநாசினி தீப்பற்றும் தன்மை கொண்டதாகும். எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.
7. கையில் கிருமிநாசினி பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொடக் கூடாது.
8. செய்முறை கூடத்தில் உள்ள மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
9. செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.
10. உள்காற்றை வெளியே தள்ளும் மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும்.
11. அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.
12. தேர்வு நடக்கும்போது மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாய விதிகள் ஆகும்.
13. மாணவர்கள் சொந்தமாக கிருமிநாசினி, தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்.
14. ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்ததற்கு பின்பும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
15. ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடுவதற்கு முன்பு கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
16. ஏற்கனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பிரிவு மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
17. அந்த ஓய்வு அறைகளையும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
18. பாதுகாப்பான குடிநீர் தேர்வு மையத்திலும், ஓய்வு அறையிலும் வைத்திருக்க வேண்டும்.
19. கழிவறைகளை சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதிகள் செய்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூற்ப்பட்டுள்ளது.