சென்னை: மாநில கல்வி வாரியத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத் தேர்வில் கடைபிடிக்கப்பட வேண்டிய தெளிவான வழிகாட்டு விதிமுறைகளை வழங்கியுள்ளது பள்ளிக் கல்வித்துறை.
ஏப்ரல் 16ம் தேதி முதல், 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்குகிறது.
அந்த வழிமுறைகள் பின்வருமாறு:
- செய்முறைத் தேர்வுக்கு முன்னதாகவும் பின்னதாகவும், ஆய்வகம் நல்ல முறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- செய்முறை தேர்வு உபகரணங்கள், தேர்வுக்கு முன்னதாகவும், பின்னதாகவும் நன்றாக சுத்தம் செய்யப்பட வேண்டும்.
- சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், சமூக உபகரணங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கேற்ற எண்ணிக்கையில், மாணாக்கர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மாணாக்கருக்கும் தேவையான இடஅளவு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- தேவையான அளவு கை சுத்திகரிப்பான்கள்(hand sanitizers) இருக்க வேண்டும்.
- கை சுத்திகரிப்பான்கள் எரியும் தன்மை கொண்டது என்பதால், ஆபத்தான ஆய்வகப் பொருட்களின் அருகில் வைக்கப்பட்டிருக்க கூடாது என்பதை உறுதி செய்தல் வேண்டும்.
- கை சுத்திரிப்பானை பயன்படுத்தியவுடன், எரியக்கூடிய எந்த ஆய்வகப் பொருளையும் மாணாக்கர்கள் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட வேண்டும்.
- மாணாக்கர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் அனைவருக்கும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்க வேண்டும். (முகக்கவசம் அணிதல், கை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி உள்ளிட்டவை)
- செய்முறைத் தேர்வின்போது, கதவுகள் மற்றும் ஜன்னல்கள், நன்றாக திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- சீரான காற்றுப் போக்குவரத்தை உறுதிசெய்யும் விதமாக, வெளியேற்று விசிறியின் இயக்கத்தை உறுதிசெய்ய வேண்டும்.
- சம்பந்தப்பட்ட அனைவரும் தெர்மல் ஸ்கேனரால் பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அனைத்து மாணாக்கர்கள் மற்றும் ஊழியர்கள், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- மாணாக்கர்கள், தாங்களே குடிதண்ணீர் மற்றும் கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை கொண்டுவரலாம்.
- செய்முறைத் தேர்வுக்கு முன்னரும் பின்னரும், மாணாக்கர்கள் தங்களின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
- காத்திருப்பு அறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- கழிவறைகள் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு, போதுமான தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உள்ளிட்ட 21 வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவைதவிர, சில துணை வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன.