கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை, எம்எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அந்த வெற்றி தற்போது நினைவுகூறப்பட்டு வருகிறது. அந்த உலகக்கோப்பையின் வின்னிங் ஷாட்டை(சிக்ஸர்) அடித்தவர் கேப்டன் தோனி. அவரின் அந்த சிக்ஸர் எப்போதும் நினைவுகூரப்படும் ஒன்றாக உள்ளது.
அதேசமயம், அந்த உலகக்கோப்பையில் அதிகபட்சமாக 97 ரன்களை அடித்து அசத்தியவர் கெளதம் கம்பீர். அவரின் அந்த ஆட்டம் மிக முக்கிய திருப்பம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேசமயம், இந்த வெற்றி குறித்து எப்போதுமே மாறுபட்ட கருத்தை, ஒரேமாதிரி வெளிப்படுத்தி வருகிறார் கம்பீர்.
தோனியின் சிக்ஸர் குறித்து அவரிடம் கேட்டால், அவர் உடனே மறுக்கிறார். அவர் கூறுவதாவது, “இந்திய அணி என்பது ஒரு கூட்டு முயற்சி மற்றும் கூட்டு செயல்பாடு. இதில், தனிமனித ஆராதனை என்பதற்கு இடமில்லை. ஆனால், கெடுவாய்ப்பாக இந்திய கிரிக்கெட்டில் எப்போதுமே தனிமனித துதிபாடல் அதிகமாக உள்ளது.
இந்திய அணி, பழைய பெருமையையே நினைத்துக்கொண்டு காலம் கடத்திக்கொண்டிருக்க முடியாது. அது முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்க வேண்டியுள்ளது. இனிவரும் போட்டிகள் குறித்துதான் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டுமென தவிர, பழையவற்றை நினைத்து பூரித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. கடந்த 2011ம் ஆண்டு என்ன நடக்க வேண்டுமென்று இருந்ததோ, அதுதான் நடந்தது. அதில் பெரிய ஆச்சர்யம் எதுவுமில்லை.
பலர் சொல்வதைப்போல், தோனியின் சிக்ஸர், கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணம் என்பதெல்லாம் ஒரு அபத்தமான கருத்து. அப்படியெனில், அந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட யுவ்ராஜ்சிங் ஆட்டத்தை மறந்துவிடலாமா? ஜாகீர் கானின் பெளலிங்கை மறந்துவிடலாமா? ஒரு சிக்ஸர், கோப்பையை வென்று தந்துவிடும் என்றால், யுவ்ராஜ் சிங்கின் சிக்ஸர்கள் பல கோப்பைகளை வென்று தந்திருக்குமே..? அந்த உலகக்கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றவர் அவர் என்பதை மறந்துவிட வேண்டாம்.
அணி என்று வரும்போது, அதில் சில தனிமனிதர்களை முதன்மைப்படுத்த வேண்டியதில்லை. அனைவரின் பங்களிப்புமே அதில் முக்கியமானது. மீடியாக்கள் சில தனிமனிதர்களை துதிபாடிக் கொண்டிருக்கலாம். ஆனால், எனக்கு மீடியாக்கள் பற்றி கவலையில்லை. நான் அணிக்காகத்தான் ஆடினேனே ஒழிய, மீடியாக்களுக்காக அல்ல” என்றுள்ளார் கெளதம் கம்பீர்.
இவரின், இந்த கருத்து பலரின் வரவேற்பை பெற்றுள்ளதோடு, சிறந்த ‘டீம் ஸ்பிரிட்’ என்றும் பாராட்டப்படுகிறது.