புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள பிவி.சிந்து, போட்டிகளுக்கு இடையே மீண்டும் தயாராகும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஆலோசனை தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய பாட்மின்டன் பயிற்சியாளர் விமல் குமார்.
தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் மற்றும் ஸ்விஸ் ஓபன் மற்றும் ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் தொடர்களில் சிந்துவின் செயல்பாடு கோப்பையை நோக்கியதாக இல்லை. இந்நிலையில்தான் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
விமல் குமார் கூறியுள்ளதாவது, “ஒலிம்பிக் பதக்கம் வெல்வதற்கான சிறந்த வாய்ப்பை பெற்றுள்ளவர் பிவி.சிந்து. ஆனால், அதற்கு இன்னும் நேரமிருக்கிறது. அதற்குமுன்னர், அவர் சிறப்பாக தயாராக வேண்டியுள்ளது.
போட்டிகளுக்கு இடையே மீண்டும் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் விஷயத்தில், சிந்து அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், முக்கிய தொடர்களில், போட்டிகளுக்கு இடையே 24 மணிநேரங்கள் கூட அவகாசம் இல்லாமல் போகலாம்” என்றுள்ளார் அவர்.