மும்பை
குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பாஜக நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி மாநில பாஜக தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய பாஜகஅரசு அமல்படுத்தி உள்ள சிஏஏக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக நகர்மன்ற தலைவர்கள், பாஜக தலைமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். இது பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கேஷவ் உபாதே டிவிட்டர் வழியே, அவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதற்கான கடிதத்தை வெளியிட்டார். இது மாநில பாஜக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த கடிதத்தில், பர்பானி மாவட்ட செலு நகர் மன்றத் தலைவர் வினோத் பாரோத் மற்றும் பாலம் நகர் மன்றத் துணைத்தலைவர் பாலசாஹேப் ரோகடேவை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செலு நகர் மன்றம் முழுவதும் பாஜக விற்கு உரியதாகும்
இரு நகர்மன்றத் தலைவர்களும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் தெரிவித்துள்ளார். அதில், அவர்களின் இடைநீக்கக் காலம் எதுவரை என தெரிவிக்கப்படவில்லை.