மும்பை: மாதம் ரூ.100 கோடி மாமூல் தர வேண்டும் என காவல்துறையினரிடம் கேட்ட மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மீது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சராக இருப்பவர் அனில்தேஷ்முக். இவர் காவல்துறை அதிகாரியிடம் மாதம் ரூ.100 கோடி மாமுல் வசூலித்து தர வேண்டும் என எஸ்பி. சச்சின் வாஸேவிடம் கூறியதாக, மும்பை ஆணையர் பரம்வீர் சிங், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பரபரப்பு கடிதம் எழுதி இருந்தார். மேலும், மாமூல் வசூலித்து தரும்படி உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கட்டாயப்படுத்தினார், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பல முறை சச்சின் வாஸேவைத் தனது இல்லத்திற்கு அழைத்து வற்புறுத்தினார் என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சார்பில் அழுத்தம் தரப்பட்டுவரும் நிலையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு முன்வந்துள்ளது. இதனை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதிபடுத்தியுள்ளார். சிபிஐ விசாரணையை தடுக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் பரம்வீர் சிங் ஏற்கனவே மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.