சேலம்: அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். பாஜகதான் இயக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே, மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிராசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திருமாவளவன், வைகோ, கீ.வீரமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: தமிழகத்தில் இப்போது இருப்பது பழைய அதிமுக இல்லை, ஆர்.எஸ்.எஸ் – பாஜகவால் இயக்கப்படும் அதிமுகவே. அதிமுக என்ற முகமூடியுடன் ஆர்.எஸ்.எஸ்-பாஜகதான் தற்போது இயங்குகிறது.
ஒரு தமிழர் கூட மோடி, அமித்ஷா, மோகன் பாகவத் காலில் விழ விரும்பவில்லை. அப்படியிருக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் அப்படி செய்கின்றனர். புலனாய்வுத்துறை மத்திய அரசின் வசம் இருப்பதால்தான், தவறு செய்த தமிழக முதல்வர் தலைகுனிய நேரிடுகிறது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தனர். ஆனால் அதுபற்றி அதிமுக முதல்வர் பேசவே மாட்டார். விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை ஏன் உருவாக்குகிறீர்கள் என்று அதிமுக முதல்வர், பிரதமரிடம் கேள்வி கேட்க மாட்டார்.
புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு என்று எதை செய்தாலும், தமிழக முதல்வர் கேள்வியே கேட்கமாட்டார். தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டுக்காக மட்டும் நான் பேசவில்லை. எல்லா மொழிகளுக்குமாக நிற்கிறேன்.
தமிழர்களின் வரலாறும், பண்பாடும் சிறந்தது, தமிழர்களுக்கு நிகராக யாரும் இருக்க முடியாது. தமிழ் கலாச்சாரம், மொழி, வரலாற்றின் மீது முழுமையான தாக்குதலை முறியடிப்பதற்கான தேர்தல் தான் இது என்று பேசினார்.