மைசூரு

த்திய பாஜக அரசின் தலையீட்டால் மாநிலங்கள் ஒற்றுமை பாதிப்பு அடையும் என அதே கட்சியைச் சேர்ந்த கர்நாடக அமைச்சர் மதுசாமி கூறி உள்ளார்.

 

மத்திய பாஜக அரசு ஒவ்வொரு மாநில விவகாரங்களிலும் தலையிடுவதால் பல பிரச்சினைகள் உண்டாவதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன.   இவற்றுக்கு மகுடம் வைத்தாற்போல் தற்போது பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில குறு நீர்ப் பாசன அமைச்சர் மதுசாமி இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் அதே கட்சியைச் சேர்ந்த குறு நீர்ப் பாசன அமைச்சர் மதுசாமி மைசூருவில் நடந்த அகில பாரதிய சாரண சரண சாகித்திய பரிஷத் என்னும் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.   தேசிய ஒற்றுமை மற்றும் மண்டல சுதந்திரம் என்னும் பெயரில் நடந்த இந்த கருத்தரங்கில் மதுசாமி உரையாற்றினார்.

மதுசாமி தனது உரையில், “மத்திய அரசின் தலையீட்டால் மாநிலங்கள் இடையே உள்ள ஒற்றுமை பாதிப்பு அடைகிறது.   இதனால் மாநில பிரிவினை அதிக அளவில் வளர்கிறது.   இது குறித்து இதே நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பெங்களூரு தெற்கு மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூரியா நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்.

நாம் தற்போது தாராளமயமான முன்னேற்றத்தை எதிர்நோக்கி உள்ளோம்.  ஆனால் அது மையப்படுத்தப்பட்டுள்ளது.  தற்போது முன்னேறி வரும் மாநிலங்களையும் முன்னேற்றம் அடையாத நிலைக்கு அழைத்து வரும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் உள்ளன.  முந்தைய இந்திரா காந்தி ஆட்சியில் இது  போல இருந்ததை நாமே விமர்சித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இது கர்நாடக மாநில பாஜகவினரிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.