டாக்கா: 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பழமை வாய்ந்த காளி கோவில், ஒரகாண்டி கோவிலில் வழிபாடு நடத்தினார்.
வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் வகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி, நேற்று வங்க தேசம் புறப்பட்டு சென்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் விமானநிலையத்துக்கே வந்திருந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து, இன்று வங்க தேசத்தின் தென்மேற்கு மாவட்டமான சக்திஹிரா, ஈஸ்வரிபூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இன்று வழிபாடு நடத்தினார். காளி கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வேத மந்திரங்களை முழங்கி காளியை வணங்கினார். அப்போது, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியிலான கிரிடத்தை காளிக்கு அணிவித்து மரியாதை செய்து வழிபாடு நடத்தினார். இந்த வெள்ளிக்கிரிடமானது ஒரு பாரம்பரிய கைவினைஞரால் மூன்று வாரங்களுக்கு மேல் கையால் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டள்ளது.
வங்கதேசம்-இந்திய எல்லை அருகே அமைந்துள்ள இந்த காளி கோயில் 51ஆவது சக்தி பீடமாக அமைந்துள்ளது. 16ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்து மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
பின்னர் மடுவா பிரிவின் நிறுவனர் ஹரிச்சந்த் தாக்கூரின் பிறப்பிடம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். மடுவா பிரிவினர் மேற்குவங்க மாநிலத்தில் அதிகமானோர் வசித்து வருகின்றனர். அதனால், அவர்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே பிரதமர் அங்கு சென்றதாக விமர்சிக்கப்படுகிறது.
15.89 கோடி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நாட்டில், 1.70 கோடி இந்துக்கள் வாழ்கின்றனர்.
முன்னதாக வங்கதேசத்தின் சுதந்திரத்தின விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர், “ ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். வங்கதேச மக்களுக்காக அவர் தனது உயிரையே வழங்கினார். காந்தி விருதை இந்தியா அவருக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வங்கதேசத்தின் சுதந்திரத்துக்காக போராடிய இந்திய ராணுவத்தின ருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
எனக்கு 20 – 22 வயது இருக்கும் என்னுடைய நண்பர்களுடன் வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டத்தின் போது நான் சிறைக்கு சென்றேன். வங்கதேசத்தில் பாகிஸ்தான் நடத்திய அட்டூழியங்கள் நன்கு தெரியும். அந்த புகைப்படங்களால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. வங்கதேச சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர்.
வங்கதேசத்துக்காக உயிர் கொடுத்தவர்களை நாம் மறக்க மாட்டோம். ஷேக் முஜிபூர் ரகுமான் நம்பிக்கையின் கதிர். எந்த நாடும் வங்கதேசத்தை அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர் உறுதி செய்தார்.
1971-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் முயற்சியும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வங்கதேசத்தில் பயன்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்’.
இவ்வாறு அவர் பேசினார்.