கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து ரவுடிகளை பாஜக அழைத்து வருவதாக மமதா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட வாக்குப் பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 3வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி வருகிறது.
அதே நேரத்தில் மமதாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியை பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்துக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து ரவுடிகளை பாஜக அழைத்து வருவதாக மமதா பானர்ஜி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
பாஜக அழைத்து வந்த உத்தரப்பிரதேச ரவுடிகள் காவி உடையில் பான் மசாலா சாப்பிட்டுவிட்டு துப்புகின்றனர். இந்த ரவுடிகளை வெளியேற்ற வேண்டும், அவர்கள் அனைவரும் மேற்கு வங்க கலாச்சாரத்தை சிதைத்து விடுவார்கள் என்று குற்றம் சாட்டினார்.