ஆரணி: அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. அதிமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் என்னை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர் என்று பேசினார்.