திருப்பூர்: திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடனை அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ரவி, அவினாசி தொகுதி வேட்பாளர் இரா. அதியமான், பல்லடம் தொகுதி வேட்பாளர் முத்துரத்தினம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் பாழ்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நாம் ஒவ்வொருவரின் பேரிலும் ரூ.62 ஆயிரம் கடன் உள்ளது. தொழில் வளர்ச்சியானது தற்போதைய அதிமுக ஆட்சியில் 4.9 சதவீதமாக உள்ளது. இது வெற்றிநடையல்ல வெற்று நடைபோடும் தமிழகம். ஆளும் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் என்பதையோ மறந்து எடப்பாடி கே.பழனிசாமி ஏதேதோ பேசிவருகிறார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது என்னசெய்தது என்று கோள்வி எழுப்பி வருகிறார்.
நாங்கள் செய்ததைத் சொன்னால் பட்டியல் போதாது என்ற போதிலும் சிலவற்றை சொல்கிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கியது. செல்லிடப்பேசியில் புரட்சி செய்து கட்டணமில்லா சேவையை உருவாக்கி தந்தோம். இந்தியா முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம்.
அதே போல, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம், தமிழகம் முழுவதும் பல்லாயிரம் கோடியில் 4 வழிச்சாலை உள்ளிட்ட ஏராளமான கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மத்திய அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக என்னென்ன திட்டங்களைக் கொண்டுவந்தது என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் சரி, அதன் பிறகு எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று பேசினார்.