சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உத்தரவை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள , ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு உள்ளது. புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அதற்கான அரசாணையை வெளியிட்டு, இடத்துக்கான பணமும் நீதிமன்றத்தில் ஒப்பைடைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ஏற்க மறுத்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தமிழகஅரசின் சட்டத்தை எதிர்த்து  வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே ஜெ.வின் மற்றொரு வாரிசுதாரரான ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஜெ.தீபா, தொடர்ந்த வழக்கு,  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் இன்று  விசாரணைக்கு  வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீபாவின் மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, தீபக் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.