திருவனந்தபுரம்
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரில் பல போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி கேரள மாநில வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது கேரளாவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக என மும்முனைப் போட்டி உள்ளது. ஆயினும் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் போட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ”வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதியில் ஒரே பெயரில் 5 முதல் 6 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானவற்றில் ஒரே புகைப்படங்களும் ஒரே முகவரியும் பயன்படுத்தப்பட்டு ஒரே நபருக்குப் பல வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வடக்கு காசரகோடு மாவட்டத்தில் உள்ள உட்மா தொகுதியில் 61 வயதாகும் குமாரி என்பவருக்கு 5 வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது போல் ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் உதவி செய்யாமல் இத்தகைய மோசடிகளைச் செய்ய முடியாது. இந்த போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்கிய பிறகு தேர்தலை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.