சென்னை: பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யச் செய்யும் மனித தன்மையற்ற செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
கழிவு நீரை சுத்தம் செய்யும்போது மரணங்கள் நிகழ்ந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்க செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மரண சம்பவங்கள் தொடர்பான வழக்குகளின் புலன் விசாரணையை துரிதப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு 3 வாரங்கள் கெடு விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.