முசாபர்நபர்: பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கும் வரை, அவர் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை தொடர தயாராக இருப்பதாக பாரதிய கிஷான் அமைப்பு சங்க தலைவர் திகாயத் தெரிவித்துள்ளார்.
மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டம் இன்று 107வது நாளாக தொடர்கிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் மத்தியஅரசு அக்கறை காட்டாத நிலையில், சட்டங்களையும் திரும்பப்பெறுவது வரை போராட்டத்தை தொடரப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் முன்னணி தலைவர்கள், கடந்த காலங்களில் நடந்த போராட்டங்களை பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி ஒன்றுமில்லாது செய்ததுபோல இந்த விவசாயிகளின் போராட்டத்தையும் அழித்து விட முடியும் என அரசு தவறாக நினைக்கிறது. ஆனால், நாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக, போராட்டத்தை ஒரு பகுதியாகவே கையாண்டு வருகிறார். எங்களின் போராட்டத்தை அவர்களால் ஒருபோதும், நசுக்க முடியாது.
எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை இந்த போராட்டம் தொடரும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் 3½ ஆண்டுகள் மீதமிருக்கிறது. அதுவரை எங்களால், போராட்டத்தை தொடர முடியும். அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம், அதுவரை போராட்டக்களத்தை நாங்கள் காலி செய்யமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.