டில்லி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஒரு பகுதியாக மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100 நாட்களைத் தாண்டியும் மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாததால் போராட்டம் தொடர்கிறது.
டில்லியில் நடைபெறுமிந்த போராட்டம் தொடங்கி வரும் 26 ஆம் தேதியுடன் 4 மாதங்கள் முடிவடைகிறது. எனவே இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்புக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. மார்ச் 26 அன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற உள்ளது.
அது மட்டுமின்றி விவசாயச் சங்கங்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கங்கள் இணைந்து மார்ச் 15 ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளன. மேலும் மார்ச் 19 அன்று “மண்டியைக் காப்பாற்றுங்கள் – வேளாண்மையைக் காப்பாற்றுங்கள்” என்னும் தினமாக அனுசரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி கோலி தகனத்தன்று வேளாண் சட்ட நகல்களைத் தீயிட்டுக் கொளுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.