சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்,  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட பல கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம் அனல்பறக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய நிலையில், நந்திகிராம் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்த மம்தா, நேற்று மாலை மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கூறிய மம்தா, கோவில் ஒன்றில் தரிசனம் முடித்து திரும்பும் போது மர்ம நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாகவும் அதன் காரணமாக அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தோய்ந்த முகத்துடன் முதல்வர் மமதா பானர்ஜி செய்தியாளர்களிடையே தெரிவித்தார். தாக்குதல் நடந்த சமயத்தில் தன்னருகே காவலர்கள் யாரும் இல்லை என்றும், இது ஒரு சதித் செயல் எனவும் காரில் இருந்தவாரே அவர் தெரிவித்தார். தற்போது கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வருடன் எப்போதும், பாதுகாவலர்களும், காவலர்களும் இருக்கும்போது, அவரை சிலர் தாக்கியதாக கூறுவது சர்ச்சையாகி வருகிறது,.

மம்தா பானர்ஜி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் இது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்புமாறு தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

இந்த நிலையில், மம்தாமீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பல கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். திமுக தலைவர் விடுத்துள்ள கண்டனச் செய்தியில்,

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். தாக்குதலில் ஈடுபட்டவர் களின் மீது உடனடியாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கூறிய மேற்குவங்க பாஜக துணைத் தலைவர் அர்ஜூன் சிங் இந்த விவகாரம் தொடர்பாக கூறுகையில், மமதா பானர்ஜி தன் மீது அனுதாபம் ஏற்படுவதற்காக நடத்திய நாடகம் இது என கூறினார்.  அவர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினார்களா? பெரும் போலீஸ் படை அவருடனே செல்கிறது. அப்படியிருக்க யாரால் அவரை நெருங்க முடியும்? அவருக்கு பாதுகாப்பு அளித்து வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். எல்லாம் அனுதாபத்திற்காக நடத்தப்பட்ட நாடகம் என அவர் தெரிவித்தார்.

கொல்கத்தாவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு, இடது காலிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.