ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வழியாக சென்னை செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்தேன்.
விமானம் நண்பகல் 12:00 மணியளவில் திருச்சியை சென்றடைந்ததும் ஒரு மணி நேரம் கழித்து சென்னை புறப்படும் என அறிவித்தார்கள். விமானத்தில் உள்ள எனது இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருந்தேன்.
அப்போது கிளினிங் சர்வீஸ் என்கிற பெயரில் திபு திபுவென சில இளைஞர்கள் விமானத்தின் உள்ளே நுழைந்தார்கள். அவர்களின் நோக்கம் கிளினிங் செய்வதை போல தெரியவில்லை, பயணிகள் மறதியில் விட்டு சென்ற பொருட்கள் எதாவது கண்களுக்கு தட்டுபடுகிறதா என்பதை தேடும் நோக்கிலேயே இருந்தது. மேலும் சம்மந்தமேயில்லாமல் லக்கேஜ் வைக்கும் கேபின் கதவுகளை எல்லாம் திறந்தும் துழாவிக்கொண்டிருந்தார்கள்.
நான் சிங்கபூரில் இருந்து எடுத்து வந்திருந்த சிடிக்கள் அடங்கிய பார்சல் ஒன்றை ஒருவன் திறக்க முயலுவதை பார்த்து என்ன செய்கிறாய் என கேட்டேன்… “எதாச்சும் புதுப்படம் எடுத்துட்டு வர்றிங்களான்னு செக் பண்றேன்” என்றான். நீ கிளினிங் சர்வீஸ்தானே உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது, கூப்பிடு உன் மேல் அதிகாரியை என்றேன்.. இவ்வளவுக்கும் அங்கே இராணுவ வீரர் போல உடையணிந்த ஒருவர் பாதுகாப்புக்கு நின்று கொண்டு இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு நிற்கிறார். என்ன சார் இதெல்லாம் என வினவியபோது “விட்டு தள்ளுங்க சார்… இதை பெருசு படுத்தாம கிளம்புங்க. இல்லைன்னா இந்த பிளைட்ல நீங்க சென்னை போக முடியாது. கம்ளைண்ட் அது இதுன்னு உங்களுக்குத்தான் நேரமும் பணமும் விரயம் ஆகும் என்று என்னை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார்.
இதை ஏன் சொல்கிறேன் எனில்…
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையற்ற தொந்தரவுகள் கொடுப்பதை சிலர் இன்னமும் வழமையாக வைத்திருக்கிறார்கள் என்பதனை பாதிக்கப்பட்ட பயணிகள் சிலரின் சமூக ஊடக பதிவுகள் வழி அறிய முடிகிறது. தன்னுடைய ரத்தத்தை வியர்வையாக சிந்தி அயல்நாட்டில் உழைத்துவிட்டு தாயகம் திரும்பும் அப்பாவி பயணிகளிடம் பிடிங்கி தின்பதில் குறியாக இருக்கும் விமான நிலையஅதிகாரிகள் முதல் அதற்கு உறுதுணையாக இருக்கும் கடைநிலை ஊழியர்கள் வரை கடுமையாக தண்டிக்கப்படல் வேண்டும்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை விமான பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு முறை மட்டுமே திருச்சி விமான நிலையம் வழி பயணித்திருக்கிறேன். சென்னையை விட திருச்சி எனக்கு அருகில் இருந்தாலும் இதுப்போன்ற பகல் கொள்ளையர்களின் மேல் உள்ள பயத்தால் சென்னையையே நாட வேண்டி இருக்கிறது.
அதற்காக சென்னை விமான நிலையம் எல்லாவற்றிலும் Perfect ன்னு முடிவு பண்ணிடாதிங்க.
கடிக்கிற நாயை விட உதைக்கிற கழுதை எவ்வளவோ மேல் என்கிற தத்துவத்தை வேண்டுமானால் இந்த இடத்தில் நிரப்பிக்கொள்ளலாம்.
நன்றி : Durai Gobi