நார்மண்டி
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல செல்வந்தருமான ஆலிவர் டசால்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்தார்.
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற தொழிலதிபரான ஆலிவர் டசால்ட் ஒரு செல்வந்த பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார். அவருடைய தந்தை செர்ஜ் டசால்ட் பிரான்சில் ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் செய்தி நிறுவனம் ஆகியவற்றை நிறுவி உள்ளார். இந்தியாவில் ரஃபேல் விமான கொள்முதல் குறித்த சர்ச்சைகள் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.
ஆலிவர் உலக செல்வந்தர்களில் ஒருவர் ஆவார். ஃபோர்ப்ஸ் ஊடக கணக்கின்படி இவர் உலக செல்வந்தர்களில் 31 ஆம் இடத்தில் உள்ளார். ஆலிவர் பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் நார்மண்டி என்னும் தலத்துக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். நேற்று பிரஞ்சு நேரப்படி மாலை 6 மணிக்கு இவர் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.
அந்த ஹெலிகாப்டர் கிளம்பும் போது கீழே விழுந்து நொறுங்கியது. ஆலிவரும் அந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொருவரான விமான ஓட்டியும் விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இவரது மறைவு பிரான்ஸ் நாட்டில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலிவரின் மறைவுக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன், பிரான்ஸ் சபாநாயகர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.