அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 365 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்தைவிட 160 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
96 ரன்களை எடுத்து இறுதிவரை நாட்அவுட்டாக இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு இன்றும் சதமடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இத்தொடரில், சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், 85 ரன்கள் எடுத்து நாட்அவுட்டாக கடைசிவரை களத்தில் நின்றார். அப்போதும் அவருக்கு சதமடிக்கும் வகையில் யாரும் துணைநிற்கவில்லை.
ஆனால், இன்று அக்ஸார் படேல் சிறப்பாக ஆடிவந்தார். அவர் கட்டாயம் துணைநிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரன்அவுட் ஆகிவிட, பின்னர் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா மற்றும் சிராஜ் ஆகியோர் அடுத்தடுத்து டக்அவுட் ஆகிவிட, 96 ரன்களோடு சுந்தர் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்திய அணி தற்போதைய நிலையில், இங்கிலாந்தைவிட 160 ரன்கள் முன்னிலைப் பெற்று மிகவும் வலுவாக உள்ளது.
ரோகித் ஷர்மா 49 ரன்களும், ரிஷப் பன்ட் 101 ரன்களும், சுந்தர் 96 ரன்களும், அக்ஸார் 43 ரன்களும் விளாசினர்.
இங்கிலாந்து தரப்பில், ஆல்ரவுண்டர் ஸ்டோக் 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும், லீச் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.