அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, தடுமாறி வருகிறது.
121 ரன்களுக்கே இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே, இங்கிலாந்து எடுத்த 205 ரன்களை தாண்டுமா? என்ற சந்தேகம் இன்னும் வலுவடைந்துள்ளது.
பெரிய இன்னிங்ஸ் ஆடி, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் ஷர்மா, 49 ரன்கள் அடித்த நிலையில், ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தைவிட, இந்திய அணி இன்னும் 84 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது 20 ரன்களுடன் களத்தில் நிற்கும் ரிஷப் பன்ட்டுடன், அஸ்வின் இணைந்துள்ளார். இந்த இணையும் விரைவில் பிரிந்தால், இந்தியா நிச்சயம் இங்கிலாந்தைவிட பின்தங்கும் என்பது கவனிக்கத்தக்கது.
ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்து வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் & பென் ஸ்டோக்ஸ், தலா 2 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளனர். சுழற்பந்துக்கு இதுவரை 1 விக்கெட் மட்டுமே கிடைத்துள்ளது.