அபுதாபி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது ஜிம்பாப்வே அணி.
இரு அணிகளுக்கு இடையே, அமீரக நாட்டில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டி, மார்ச் 2ம் தேதி அபுதாபியில் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 131 ரன்களை மட்டுமே எடுக்க, ஜிம்பாப்வே 250 ரன்களை சேர்த்து, 119 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவக்கிய ஆப்கானிஸ்தான் அணி 135 ரன்களுக்கெல்லாம் காலியானது. இதன்மூலம், வெறும் 16 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் இம்ராகிம் ஸர்தான் மட்டுமே 76 ரன்களை அடித்து நம்பிக்கை அளித்தார். அமீர் ஹம்சா 21 ரன்களை சேர்த்தார்.
ஜிம்பாப்வே அணியில் விக்டர் யாவ்ச்சி மற்றும் டொனால்டு டிரிபனோ தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர், வெறும் 17 ரன்களை அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஜிம்பாப்வே அணி 3.2 ஓவர்களிலேயே அந்த ரன்களை எட்டி, போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.