அகமதாபாத்: சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளத்தில், டெஸ்ட் போட்டி விரைவாக முடிந்தால் மட்டும், தேவையற்ற விமர்சனங்கள் எழுகின்றன என்ற கருத்தை, இந்திய கேப்டன் விராத் கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுபோன்றதொரு கருத்தை, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராத் கோலி கூறியிருப்பதாவது, “சுழற்பந்து ஆடுகளங்களுக்கு எதிராக தேவைற்ற அதிக கூச்சல்கள் எழுகின்றன என்பதை நாம் முழுமையாக ஏற்கிறேன். எந்த ஒன்றுமே சமநிலையில் வைத்து மதிப்பிட வேண்டும். ஆனால், பலரும் அப்படி நியாயமாக நடந்து கொள்வதில்லை.
நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய டெஸ்ட் போட்டியை, வெறும் 36 ஓவர்களில், 3ம் நாளிலேயே இழந்தோம். ஆனால், அதைப்பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. நியூசிலாந்தில் நாங்கள் தோற்றதற்கு எங்களின் மோசமான ஆட்டம்தான் காரணம். ஆனால், அதற்காக ஆடுகளம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவில்லை.
நாங்கள் வெற்றி பெறுவதற்கு காரணம், ஆடுகளம் குறித்து கவலைப்படாமல், ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பதுதான். நாம் நம்மளவில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்” என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மற்றும் சில இந்திய முன்னாள் வீரர்களுக்கு புரியும் வகையில் பேசியுள்ளார் விராத் கோலி.