மீரட்

டில்லியில் குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்தை பாஜகவினரே திட்டமிட்டு நடத்தியதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டில்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையொட்டி கடந்த ஜனவரி 26 அதாவது குடியரசு தினத்தன்று டில்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை விவசாயிகள் நடத்தினர்.  அதில் பெரும் கலவரம் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் வேளாண் சட்ட எதிர்ப்பு  போராட்டங்களுக்கு ஆதரவு திரட்ட உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் விவசாய சங்கங்கள் ஒரு மகா பஞ்சாயத்து கூட்டத்தை நடத்தியது.  இதில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே அழிக்கக் கூடிய வகையிலான சட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. இச்சட்டங்கள் அமலுக்கு வந்தால், விவசாயிகளின் நிலங்கள் பெரு நிறுவனங்களால் பறிக்கப்பட்டு விடும்.

அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அவர்களே கூலித் தொழிலாளராக மாற்றப்பட்டு விடுவார்கள். இதனால் இந்த சட்டங்களை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் கலவரம் வெடித்தது. உண்மையில் இந்த கலவரத்தைத் திட்டம் தீட்டி அரங்கேற்றியவர்கள் பாஜகவினர்தான்.  அவர்கள் தான் செங்கோட்டையில் சீக்கியக் கொடியை ஏற்றியவர்கள். இருப்பினும் தேசத்துக்கு எதிராகச் செயல்பட்டதாக விவசாயிகள் மீது தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.