அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம், பேட்டிங் – பெளலிங் இரண்டுக்கும் சமஅளவு சாதகமாக இருக்கும்படி அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அகமதாபாத் பிட்ச்சை ஐசிசி ஆய்வு செய்யப்போவதில்லை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. பேட்டிங் – பெளலிங் இரண்டுக்கும் சம வாய்ப்புள்ள ஆடுகளத்தை அமைக்கிறோம் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த சோதனை முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆடுகளம் பெளன்சருக்கு சாதகமாக அமைக்கப்படும்போது, வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியத்துவம் பெறுவார்கள். இது, இங்கிலாந்து அணிக்கு சற்று சாதகமாகவும் அமையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், இந்திய அணியும் எளிதாக விட்டுக்கொடுத்துவிடாது.
ஒரே மைதானத்தில் இரு போட்டிகள் நடத்தப்படும்போது, ஒரு போட்டியின் முடிவை மட்டும் ஒதுக்கிவைத்துவிட முடியாது. கடைசி டெஸ்ட் போட்டியும் முடிந்தபின், ஐசிசி நடுவர் ஸ்ரீநாத் அறிக்கைக்குப் பின்புதான் ஐசிசி நடவடிக்கை இருக்கும். இப்போது வரை, இங்கிலாந்து அணி சார்பில் ஐசிசி அமைப்பிடம் ஆடுகளம் குறித்து எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.