வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 36 நாட்கள் ஆன நிலையில், சிரியாவின் மீது திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்க விமானப்படை.
கிழக்கு சிரியாவில், ஈரான் நாட்டினால் ஆதரிக்கப்படும் பயங்கரவாத குழுவினரின் இடத்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஆனாலும், இந்த தாக்குதல் இதற்குமேல் விரிவடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு, இந்த இடம் முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுவதால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம், ஈராக் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படாதது அந்நாட்டு அரசை நிம்மதியடைய வைத்துள்ளது. அங்கு, அமெரிக்கர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கில், மோதல் இன்னும் பெரிதாகி விடக்கூடாது என்பதே பைடன் நிர்வாகத்தின் விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.