வெலிங்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது நியூசிலாந்து அணி.
முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து வென்றிருந்தது. இந்நிலையில், இரண்டாவது டி-20 போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
இந்நிலையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் மார்ட்டின் கப்தில் 50 பந்துகளில் 8 சிக்ஸர் & 6 பவுண்டரிகளுடன் 97 ரன்களை வெளுத்தார்.
கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் 53 ரன்களையும், நீஷம் 16 பந்துகளில் 45 ரன்களையும் அடிக்க, நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களைக் குவித்தது.
சவாலான இலக்கை நோக்கி பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், ஸ்டாய்னிஸ் 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகளுடன் 78 ரன்களை விளாசினார். ஜோஷ் பிலிப்பி 32 பந்துகளில் 45 ரன்களையும், டேனியல் சாம்ஸ் 15 பந்துகளில் 41 ரன்களையும் அடித்தாலும், ஆஸ்திரேலியாவால், 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. வெறும் 4 ரன்களில் வெற்றியைக் கோட்டைவிட்டது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், இன்னும் 1 போட்டியில் தோற்றால், ஆஸ்திரேலியா தொடரை இழந்துவிடும்.