சென்னை: தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது.

பபாசி சார்பில் நடைபெறும் 44வது புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சென்னை  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த கண்காட்சி மார்ச் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சிக்காக 700 அரங்குகள் அமைக்கப்பட்டு 6 லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.நாள்தோறும்  காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை புத்தகக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.

கண்காட்சியில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்படுகிறது. பார்வையாளர்கள் நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது.

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்றும், முகக்கவசம் அணிந்திருப்பவர்கள் மட்டுமே புத்தகக் கண்காட்சியினுள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து பபாசி தலைவர் சண்முகம் கூறி இருப்பதாவது: கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும் வலியுறுத்தி உள்ளோம். மாஸ்க் அணியுமாறும் வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

கண்காட்சியில் வருபவர்களுக்கு மாஸ்க் வழங்கப்படும். ஆங்காங்கே சானிடைசர்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனாவானது வெளியீட்டாளர்களை பாதித்து உள்ளது. எனவே அவர்களுக்கான ஸ்டால் வாடகையை 20 சதவீதம் குறைத்து இருக்கிறோம் என்று கூறினார்.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும். ஆனால், இம்முறை கொரோனா கட்டுப்பாடுகளால் இன்று தான் புத்தகக் கண்காட்சி தொடங்கி இருக்கிறது.