ஈரோடு: ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் ஐஆர்டி பெருந்துறை மருத்துவ கல்லூரியை 2017ம் ஆண்டு முதலமைச்சர், அரசு மருத்துவக்கல்லூரியாக கருதப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து அந்த மருத்துவ கல்லூரி 2018ல் சுகாதாரத்துறை கீழ் வந்தது.
சுகாதாரத்துறை கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டும் வந்தது. எனவே, அரசு மருத்துவக் கல்லூரிக்கு உரிய மருத்துவ கட்டணங்களை மட்டுமே வசூலிக்க கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசின் ஆண்டுக் கட்டணமாக 13 ஆயிரத்து 610 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து ஈரோடு பெருந்துறை கல்லூரிக்கும் அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.