மதுரை: அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அறநிலையத்துறை வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக பொதுநல வழக்கு போட்டிருந்தார். அவரது மனுவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அதாவது கோவிலுக்கு சொந்தமான இடங்கள், அவற்றின் கட்டண விவரங்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பட்டியல் வைக்க உத்தரவிட வேண்டும் என்றும், கோவில்களில் நடைபெறும் பூஜை, அதற்குரிய கட்டணங்கள், கோவில் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகை விவரம், நன்கொடை, செலவினங்கள், ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவில் சொத்துக்களை கண்டறிய அடையாள குழுவும், பரிசீலனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் நில குத்தகை மற்றும் வாடகைதாரர்கள் குடியிருப்போர் அனுபவத்தில் உள்ளோர், ஆகியோரிடம் இருந்து வரவேண்டிய பாக்கித்தொகை 297.63 கோடி ரூபாய் என்றும், அதை வசூலிக்கும் வகையில், 42,818 பேருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதில் 14,026 பேரிடம் இருந்து 32.49 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யார் யார்?, சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பது தொடர்பான முழு விவரங்களையும், 10 மாதத்திற்குள் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
அதுபோல அறநிலையத்தொடர்பான திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியை பயன்படுத்த தடை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம். பொது நல நிதியை பயன்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.