சென்னை: அவதுாறு வீடியோக்களை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து, கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் சி.எஸ்.கர்ணன். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை பற்றி, அவதுாறாக பேசி, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டார்.
இந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப் பதிந்து 2020ம் ஆண்டு டிசம்பரில் அவரை கைது செய்தனர். ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி வி.பாரதிதாசன் மனுதாரரை, ஜாமினில் விடுவித்தால், புலன் விசாரணையில் குறுக்கிடலாம் என்பதால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.