இங்கிலாந்திற்கு எதிராக சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலுமே மின்னியுள்ளார் சொந்த ஊர் நட்சத்திரம் அஸ்வின்!
இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்தாலும், இவரின் தனிப்பட்ட செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன. பந்துவீச்சுக்கு முதல் 3 நாட்கள் வரை ஒத்துழைக்காத பிட்சில், 3 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர், நான்காம் நாளில் பந்துகள் திரும்பியபோது, 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆகமொத்தம் அப்போட்டியில் 9 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதேபோன்று, முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில், முக்கியமான கட்டத்தில் 31 ரன்களையும் எடுத்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதுமட்டுமின்றி, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், முக்கிய பேட்ஸ்மென்கள் திணறிய நிலையில், 148 பந்துகளை மட்டுமே சந்தித்து 1 சிக்ஸர் & 14 பவுண்டரிகளுடன் சதமடித்தார்.
இதனால், இந்திய அணி, இங்கிலாந்தைவிட 481 ரன்கள் முன்னிலை பெற முடிந்தது. ஆனால், அதோடு ஓய்ந்துவிடவில்லை அஸ்வின். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசி, 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
அதாவது, இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மொத்தம் 8 விக்கெட்டுகள் மற்றும் 129 ரன்கள்.
ஒரே டெஸ்ட் போட்டியில், சதமடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் சாதனையை அஸ்வின் இதுவரை 3 முறை செய்துள்ளார். இதன்மூலம், இதே சாதனையை மொத்தம் 5 முறை செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் போதமிற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
இந்தியா வென்ற சென்னையின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.