கடந்த டெஸ்ட் போட்டியில், வாஷிங்டன் சுந்தரால் 1 விக்கெட்கூட வீழ்த்த முடியவில்லை என்ற காரணத்தால், இரண்டாவது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் அவரின் செயல்பாடு பேசும் வகையில் அமையவில்லை.

கடந்த டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சில் தன்னால் சோபிக்க முடியவில்லை என்றாலும்கூட, முதல் இன்னிங்ஸில் 85 ரன்களை எடுத்து நாட்அவுட்டாக இருந்தார் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு யாரேனும் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், அவர் சதம்கூட அடித்திருக்கலாம்.

எனவே, சுழற்பந்து வீச்சாளரான அவருக்கு பதிலாக, மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் அணிக்கு பெரிய பங்களிப்பு எதையும் செய்யவில்லை.

முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்கூட எடுக்காத அவர், பேட்டிங்கில், ரிஷப் பன்ட்டிற்கு ஒத்து‍ழைப்பு கொடுக்காமல் டக்அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கிலும் வெறும் 3 ரன்களே எடுத்தார். கடைசியில் பிட்சி, முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிய நான்காம் நாள் ஆட்டத்தில், பென் ஃபோக்ஸ் மற்றும் மொயின் அலி விக்கெட்டுகளை மட்டும் எடுத்தார்.

இவரின் செயல்பாடுகளோடு ஒப்பிடுகையில், வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடுகள் சிறப்பானவையாகவே கருதப்படுகின்றன. இந்தப் போட்டியில் அவர் ஆடியிருந்தால், சில விக்கெட்டுகளையும் எடுத்து, ரன்களையும் அடித்து, ஆல்ரவுண்டராக இருந்திருப்பார்.