நான்காம் நாளின் பாதியிலேயே முடிந்துவிட்ட சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், சுழற்பந்துவீச்சு பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

சேப்பாக்கம் முதல் டெஸ்ட்டில், பிட்ச் முதல் 3 நாட்களில் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத நிலையில், டாஸில் தோற்ற இந்திய அணி பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டிற்கு, சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் பிட்ச் தயார் செய்யப்பட்டது.

இதனால், பந்துகள் முதல் நாளிலேயே திரும்ப ஆரம்பித்தன. ஆனாலும், இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில், ரோகித் ஷர்மா, ரஹானே மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் ஆடி 329 ரன்களை அடித்தனர். அந்த இன்னிங்ஸில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கிடைத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 7.

பின்னர், இங்கிலாந்து களமிறங்கி 134 ரன்களுக்கே ஆல்அவுட் ஆனது. அந்த இன்னிங்ஸில், இந்திய சுழற்பந்து வீச்சுக்கு கிடைத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 7.

பின்னர், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்களை எடுத்தது. அதில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கிடைத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 8.

வெற்றிக்கு 482 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து, 164 ரன்களில் காலியானது. ஆனால், இந்தமுறை இங்கிலாந்தின் அனைத்து விக்கெட்டுகளையும்(10), இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே எடுத்தனர்.

ஆக மொத்தம், இந்த டெஸ்ட் போட்டியில், இரு அணிகளின் சுழற்பந்து வீச்சுக்கு கிடைத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 32. வேகப்பந்து வீச்சுக்கு 7 விக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன. 1 விக்கெட் ரன்அவுட் மூலம் கிடைத்தது.