சென்னை: இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சேப்பாக்கம் பிட்ச் குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்தின் மைக்கேல் வானின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன்.

இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்து தோல்வியின் பிடியில் வசமாக சிக்கியுள்ளது. சேப்பாக்கம் பிட்ச், தனக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷேன் வார்ன் கூறியுள்ளதாவது, “ஹலோ மைக்கேல் வான்… முதல் டெஸ்ட்டின் சில நாட்கள் விக்கெட் விழாமல் உங்கள் அணி வீரர்கள் பேட் செய்தபோது ஆடுகளத்தைப் பற்றிப் பேசவில்லை. நீங்கள் வெற்றிபெறும் தருவாயில், இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்தபோது ஆடுகளத்தைப் பற்றி நீங்கள் பேசவில்லை. இப்போது ஆடுகளம் பற்றிப் பேசுகிறீர்கள்.

ஆனால், 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் ஆடுகளம் இரு அணிகளுக்குமே முதல் நாளில் இருந்து ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இங்கிலாந்து அணிதான் மோசமாகப் பந்து வீசுகிறது. ரோஹித் 161 ரன்கள் அடித்தார். ரஹானேவும், ரிஷப் பன்ட்டும் சிறப்பாக விளையாடினர்.

பந்து சுழல்வதிலும், ஸ்விங் ஆவதிலும் எந்த வேறுபாடும் இல்லை. பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் நியாயமான போட்டி இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறோம். இந்தியா பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இங்கிலாந்தை விடச் சிறப்பாகச் செயல்படுகிறது. இரு அணிகளுக்குமே சூழல் முதல் நாளில் இருந்து ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது” என்றுள்ளார் வார்ன்.