காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் உணவு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் இருந்து சிப்காட்டில் உள்ள பல கம்பெனிகளுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
இந் நிலையில், அந் நிறுவனத்தில் இருக்கும் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த உரிமையாளர் 3 துப்புரவு பணியாளர்களை அழைத்து உள்ளார். அதன்படி முருகன், பாக்கியராஜ், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து வெளிப்பட்ட விஷவாயு தாக்க 3 பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.