டெல்லி: தலைநகர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 74வது நாளாக தொடர்கிறது. இன்று நாடு முழுவதும் ‘சக்கா ஜாம்’ என்ற பெயரில் 3 மணி நேரம் சாலைமறியல் போராட்டத்தில் விவசாயிகள் குவித்துள்ளனர். இந்த போராட்டம் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறுகிறது.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 74வது நாளாக தொடர்கிறது. தற்போது, விவசாயிகளின் போராட்டம், சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தப்ப்ட்டு வருகிறது. விவாதத்தின்போது பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் சட்டத்தில் எந்தவொரு குறையும் இல்லை என்றும், விவசாயிகளின் போராட்டம் காரணமாக சில மாற்றங்களை செய்ய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால், விவசாயிகள் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
’சக்கா ஜாம்’ என்பது மற்ற வாகனங்களை ஓட விடாமல் செய்யும் சாலைமறியல் போராட்டம் . டெல்லியில் உள்ள விவசாயிகள், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்திற்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டம் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக, அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.